கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (அ) வகுப்பிற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை தொடர்பான புதிய விசேட வர்த்தமானி (இல. 2476/18) வெளியிடப்பட்டுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கு இந்த புதிய திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை.
முக்கிய மாற்றங்கள் மற்றும் காலக்கெடு நீடிப்பு
இந்த புதிய திருத்தத்தின் மூலம் தகைமைகளை பூர்த்தி செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
- தகைமை திகதி: இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை என அறிவிக்கப்பட்டிருந்த தகைமை காலம், தற்போது 2026 மார்ச் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பதாரர்கள் தமது கல்வி மற்றும் ஏனைய தொழில்முறை தகைமைகளை 2026.03.05 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- வயது எல்லை: கல்வி தகைமைகளுக்கான காலம் நீடிக்கப்பட்டாலும், வயது வரம்பு மாற்றப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதியன்று தமக்குரிய வயது தகைமையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான விசேட சலுகைகள்
2023 பெப்ரவரி 10 ஆம் திகதி நிலவரப்படி பொதுச் சேவையில் (Public Service) இருந்த பட்டதாரிகளுக்கு இந்த புதிய வர்த்தமானி குறிப்பிட்ட சில சலுகைகளை வழங்குகிறது:
- தற்போது சேவையில் உள்ளவர்கள்: 2023.02.10 அன்று சேவையில் இருந்து, இன்னும் தொடர்ந்து பணியாற்றும் பட்டதாரிகள், 2023.02.10 முதல் 2026.03.05 வரையான காலப்பகுதிக்குள் பட்டப்படிப்பை முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். (நிபந்தனை: 2023.02.10 அன்று அவர்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும்).
- சேவையிலிருந்து விலகியவர்கள்: 2023.02.10 அன்று சேவையில் இருந்து, பின்னர் முறையான அனுமதியுடன் பதவி விலகியவர்கள், 2026.03.05 இற்கு முன்னர் பட்டம் பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.
மாகாண வாரியான வெற்றிடங்கள் மற்றும் முன்னுரிமை
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நிரல் 05 (Schedule 5) இன் படி, சகல மாகாணங்களுக்குமான (மேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு, மத்திய, வடமேல், சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா) திருத்தப்பட்ட வெற்றிட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- முன்னுரிமை: ஒரு விண்ணப்பதாரர் தனது சொந்த மாகாணத்தைத் தவிர்ந்த வெளி மாகாண வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, அந்தந்த மாகாணத்தின் நிரந்தர வதியுனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- அனைத்து தகுதியுள்ள உள்ளூர் விண்ணப்பதாரர்களும் நியமிக்கப்பட்ட பின்னரே, வெளி மாகாண விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர். இது தொடர்பான விதிகளை அந்தந்த மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் தீர்மானிக்கும்.
மேலதிக தகவல்களுக்கு:
- விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் முழுமையான வெற்றிடப் பட்டியலை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது 2476/18 இலக்க வர்த்தமானியில் பார்வையிட முடியும்.
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி: 2026 மார்ச் 05
